உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா..?கனல் கண்ணன் கைது- அண்ணாமலை கடும் கண்டனம்.!!

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார்.

இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தது.

அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்கக் கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்குக் கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்பவர்கள் இவரின் சிலையைப் பார்ப்பது சரியாக இருக்காது. அவரின் சிலையை உடைத்தால் அதுதான் உண்மையான எழுச்சி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த விவகாரத்தில் கனல் கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது முன்ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று சுதந்திர தினத்தன்று புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் ஆகஸ்ட் 26 நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கனல் கண்ணன் கைதுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது இந்த திமுக அரசு.

மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாகக் கருத்துச் சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள். சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த திமுக அரசு, கனல் கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை” என்று கூறி உள்ளார்.