மது போதையில் தகராறு… கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை – கோவையில் பயங்கரம்..!

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்ஜி புதூர் என்கின்ற இடத்தில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த முட்புதராகவும், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படக்கூடிய பகுதியாக இருந்துள்ளது.

இந்தப் பகுதியில் நேற்று இரவு, புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் இப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (22) என்பவரது நண்பர்களும் அதே பகுதியில் வேறொரு இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். பாலாஜி புவனேஷ் குமார் மற்றும் நந்தகுமார் அவர்களுடைய நண்பர்கள் என அனைவரும் மதுபோதையில் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.மது போதையில் இருந்த இரண்டு குழுவினரும் சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஷ்குமாரை குத்தியுள்ளனர்.

புவனேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தவுடன் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து கத்தியால் குத்திய நந்தகுமார் மற்றும் நண்பர்கள் அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றனர்.

இது தொடர்பாக பீளமேடு போலீசார் தகவல் அறிந்து உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து கோவை மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.