பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவரா? புகழேந்தி கடும் சாடல்..!

சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா?

என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி.

அதிமுகவை இணைந்து நிர்வகிக்க ஈபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் என விமர்சித்திருந்தார்.

அதற்கு, ஓபிஎஸ் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடப்பாடியின் விமர்சனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய புகழேந்தி, “வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு நேற்றைய தினம் வந்துள்ளது. தீர்ப்பை சாதகமாகப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் பெரிய ஆரவாரம் இல்லாமல் இருக்கிறார். எங்கே போனாலும் அவருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் வென்ற ஓ.பன்னீர்செல்வம் பெரிய மனதுடன் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்தார். கட்சித் தொண்டர்களும் நாட்டு மக்களும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார் என்று அவர் மீது குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கருணாநிதி படத்திறப்பு விழாவின்போது 20 நிமிடம் பேசினீர்களே பழனிசாமி. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எல்லாம் சொன்னீர்களே.. ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதை பெரிய குற்றமாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலினை ரவீந்திரநாத் பார்த்தது அசிங்கமாம். அதிமுகவில் இருப்பது ஒரே ஒரு எம்.பி தான் அவர் போய் பார்த்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜெயலலிதாவே ஸ்டாலினை அழைத்து வரவேற்றுப் பேசி அனுப்பினார். அதற்காக திமுகவுடன் கூட்டு என்று சொல்லி விடுவதா? நீங்கள்தான் திரைமறைவாக திமுகவினருடன் கூட்டு சேர்த்துகொண்டு கொடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சிக்கிறீர்கள். திமுகவில் யார் யாரோடு தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொன்றாக வெளியிடட்டுமா? வெளியிடாமல் விடமாட்டோம்.

அதிமுகவில் தொண்டன் தலைவராவார், முதல்வராவார் என்றால் பழனிசாமி வேறு ஒரு ஆளை ஒற்றை தலைமையாக நியமிக்க வேண்டும். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சாதாரண ஒரு தொண்டன் வரட்டும். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் பதவி வெறியின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம். தலைமை நிலைய செயலாளர், மாவட்ட செயலாளர்கள் என பல பதவிகளை வைத்துக்கொண்டு, பொதுச் செயலாளர் பதவியையும் அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா?

ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசுவது, இழிவாகப் பேசுவது என எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களுக்கும் தேவையற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். கட்சியின் விதிகளே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர் நேரில் வந்தால் கூட நான் விவாதிக்க தயாராக உள்ளேன்.

சிறையில் இருந்து கட்சியை நீங்கள் நடத்த முடியாது. அதனால்தான் முதல்வரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறோம். கொடநாடு வழக்கை துரிதமாக செயல்படுத்துங்கள். ஜெயிலுக்கு போகிறவர்கள் போகட்டும். வெளியே இருப்பவர்கள் கட்சியை நடத்தட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.