சென்னையில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருந்து காணாமல் போன ஆவணங் களா..? பல திடுக்கிடும் திருப்பங்களுடன் விசாரணை..!!

தமிழகத்தையே அதிரவைத்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, தற்போது மீண்டும் ஒரு திருப்பத்தை சந்தித்துள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான செந்தில்குமார், அதிமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தவரான மணல் அள்ளும் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தவர் ஆறுமுகசாமி.

இப்போது ஏன் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரை தனிப்படை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களே காரணம் என்கிறார்கள் போலீஸ். 2017 ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர் சென்னை சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷில்லி நிவாஸ் அப்பார்ட்மெண்ட்டின் அறை எண் 302-ல் சசிகலா தொடர்புடைய சொத்து ஆவணங்கள் இருப்பதாக கூறினார். நவம்பர் 18 ஆம் தேதி 302 எண் அறைக்குச் சென்ற மூன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து கத்தை கத்தையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அறையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சசிகலா தரப்பில் ரூ.1,911 கோடி சொத்துக்களை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும், கடன் பத்திரமும் இருந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், விசாரணைக்குள்ளாகியுள்ள தொழிலதிபர் செந்தில்குமார் தொடர்புடையது என்கிறது காவல்துறை. அதன் அடிப்படையில்தான், செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்பி, சசிகலா தரப்பிடம் ஆவணம் கொடுத்ததை உறுதிப்படும் நோக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆவணங்கள் சென்னையில் மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்ற வழக்கில் கைதான செபாஸ்டீன் என்பவர் பெயரில். அறை பதிவு செய்யப்பட்டது இன்னோர் அதிர்ச்சி ஆகும்.

கைதியாக இருந்த செபாஸ்டீனின் அடையாள அட்டையை பயன்படுத்தி விடுதியில் அறையை புக் செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. கனகராஜ் தலைமையில் கோடநாடு பங்களாவிற்கு புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கோடநாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் சேலத்தில் உள்ளவர்களிடம் கனகராஜ் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு சம்பவத்திற்கும் எதாவது தொடர்புள்ளதா? பங்களாவில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் சென்னைக்கு வந்தனவா என்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்களை பறிமுதல் செய்த வருமானவரித்துறை அதிகாரிகளிடமும் தனிப்படை போலீசார் விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அறையை புக் செய்தது யார்? ஆவணங்கள் இருப்பதை வருமானவரித்துறைக்கு தகவலாக சொன்னது யார்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.