முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் நடந்துவரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது. இதனடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவருக்கு சொந்தமான, தொடர்புடைய சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் என 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் நாளேடான நமது அம்மா வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக நடக்கும் வருமான வரி சோதனை குறித்து கருத்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply