14 பேர் நியமனம் ட்ரைலர் தானாம்… டெல்லி கொடுத்த “ப்ரீ ஹேண்ட்”.. ஓபிஎஸ் போடும் புது திட்டம்…

சென்னை: அதிமுகவில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை ஓ பன்னீர்செல்வம் நியமித்ததற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய நம்பிக்கையோயோடு ஓ பன்னீர்செல்வம் செயல்பட தொடங்கி உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் பொதுக்குழு முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் முறையிட்டு இருக்கிறார்.

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொடர்பான பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. அதிமுக வங்கி கணக்குகளை முடக்குவது தொடர்பான விவகாரம் ஆர்பிஐயில் நிலுவையில் உள்ளது.

அதிமுகவில் சட்ட போராட்டங்களை மட்டும் செய்து வந்த ஓ பன்னீர்செல்வம் இந்த நிலையில்தான் தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளார். அதன்படி கட்சியில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கியமான மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எம்பி தர்மர், இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரெட்சன் அம்பிகாபதி, தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி பல நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஓ பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு வெறும் டீசர்தான் என்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க உள்ள அதிமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் அனைத்திற்கும் புதிய நிர்வாகிகளை வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் நியமிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி “டெல்லி” கொடுத்த ப்ரீ ஹேண்ட் காரணமாக ஓ பன்னீர்செல்வம் அடித்து ஆட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த ஆலோசனைகளை வழங்குகிறார் என்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை, ஓ பன்னீர்செல்வம் ஆர்பிஐ அமைப்பை நாடினார். அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் உள்ளது. இதில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதுவரை அதிமுகவின் வங்கி கணக்குகளை யாரும் பயன்படுத்த கூடாது. அது சட்ட விரோதம். அதனால் அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார். கட்சி விதி மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவரம் அறிந்த ஒரு முக்கிய டெல்லி – தமிழ் புள்ளிதான் இந்த ஐடியாவை ஓ பன்னீர்செல்வத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இப்படி டெல்லியின் ஆலோசனையுடன், அவர்களின் முழு அனுமதியோடுதான் ஓ பன்னீர்செல்வம் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதோடு மாவட்டவாரியாக போட்டி மாவட்ட செயலாளர்களை நியமித்து, அவர்களை வைத்து தொண்டர்களை பிரிக்கவும் ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.

இதில் பல முடிவுகள் எடுக்கப்படலாம். அதோடு பொதுக்குழுவை ஓபிஎஸ் கூட்டவும் வாய்ப்பு உள்ளது. அதே வானகரத்திலேயே பொதுக்குழு நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள். தான் கூட்டும் பொதுக்குழுவே உண்மையானது. தான் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லும் வகையில் ஓ பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள். இதற்காக தேதி ஒன்றையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.