பிரதமரின் தமிழ்பற்றின் வெளிப்பாடே 3 தமிழர்கள் ஆளுநர்களாக நியமனம்- சி.பி.ராதா கிருஷ்ணன் பேட்டி..!

கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் பதவி எனக்கு கிடைத்தது மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். பிரதமரும், குடியரசு தலைவரும் தமிழின் மீதும், தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது பற்றும், பெருமையும் கொண்டிருக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடு தான் மூன்று தமிழர்கள் வெவ்வேறு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்துகொண்டு தான் இருக்கும். நியாயமானது எதுவோ அதை மன வலிமையோடு எதிர்கொண்டால் அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் காணாமல் போய்விடும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.