நியூசிலாந்தை தாக்கிய சூறாவளி: இருளில் மூழ்கிய வீடுகள் – தேசிய அவசர நிலை பிரகடனம்..

நியூசிலாந்தில் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கேப்ரியல் சூறாவளியின் கடுமையான தாக்குதலினால் நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் பரவலான வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி, பே ஆஃப் ப்ளென்டி, வைகாடோ மற்றும் ஹாக்ஸ் பே ஆகிய பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், ‘ராணுவம் ஏற்கனவே வடக்கு தீவின் கடினமான வடக்கு பகுதிகளில் தரையிறங்கி மக்களை வெளியேற்றுவதற்கும், அத்தியாவசிய பொருட்களை நகர்த்துவதற்கும் உதவுகிறது’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், தங்கள் அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், கூடுதல் ஆதாரங்களை வழங்குவதற்கும் உதவுகிறது என்று அவசரநிலை மேலாண்மை அமைச்சர் கீரன் மெக் அனுல்டி கூறியுள்ளார்.

சூறாவளி பாதிப்பால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. ஏர் நியூசிலாந்து மட்டும் 592 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், 35000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுமார் ஒரு லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.