தமிழ்நாட்டில் துவங்கிறது ஆப்பிள் ஐபோன் உற்பத்தி- ஏன் தெரியணுமா..?

சென்னை: ஐபோன் தயாரிப்பில் கோலோச்சி வரும் தைவானின் பெகாட்ரான் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.

ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க உள்ளதுதான் ஹைலைட்.

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள பெகாட்ரான் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட 18 மாதங்களில் தனது தொழிற்சாலையை பெகாட்ரான், செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

‘இதே வேகத்துடன் செயல்பட்டால், தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை விரைவில் எட்டிப்பிடித்துவிட முடியும்’ என்கின்றனர், தொழில்துறை வல்லுநர்கள். ஆனால், இந்தக் கனவு சாதாரணமானதல்ல; அதற்கான முகமாக பெகாட்ரான் நிறுவனத்தின் தொடக்க விழா அமைந்துள்ளது. நான்காம் தொழில் புரட்சியைப் பொறுத்தவரையில் உலகளவில் மின்னணு துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அளவில் மின்னணு சார்ந்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது 20 சதவீதம். இது வரவேற்கப்பட வேண்டிய பங்களிப்பு எனவும் தொழில்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

மின்னணு துறையைப் பொறுத்தவரையில் சாம்சங், சான்மினா, பாஷ், டெல், டாடா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் எனப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக, பெகாட்ரான் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘சீனாவில்தான் புதிய மாடல் செல்போன்கள் அதிகம் தயாராகின்றன. அதனை மாற்றும் வகையில் அத்தகைய உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அந்த நோக்குடன்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்’ என்றார். ஐபோன் தயாரிப்புகளில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பெகாட்ரான் உள்ளது. முன்னணி ஐபோன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக தனது தயாரிப்புகளை பெகாட்ரான் வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் தைவான் நாட்டில் உள்ள தைபே பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு சேவையைத் தொடங்கிய பெகாட்ரான், உலகின் பல நாடுகளில் கால்பதிக்கும் நிறுவனமாக வளர்சியடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ஏறக்குறைய 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பெகாட்ரான் நிறுவனம், மதர்போர்டு மற்றும் வயர்லெஸ் சிஸ்டங்கள், டெஸ்க்டாப் பிசிகள் எனப் பல தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பெகாட்ரான் நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்கும் முன்பாகவே 2023 ஆம் நிதியாண்டுக்கு 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி செய்வது என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிறப்பான இலக்குடன் பெகாட்ரான் களமிறங்கியுள்ளது. இந்திய சந்தையில் சீனத் தயாரிப்பு செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதனைக் கணக்கில் கொண்டே தமிழ்நாட்டை தைவானின் பெகாட்ரான் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. ‘சீன வர்த்தகத்துக்குப் போட்டியாக ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாட்டில் தைவான் தொடங்குவது என்பது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கே ஒரு மைல் கல்’ என தொழில்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெகாட்ரான் நிறுவனம் தொடர்பான புள்ளிவிவரங்களும் ஆச்சர்யமளிக்கின்றன. உலகளவில் மிகப் பெரிய நிறுவனமான பெகாட்ரானில் ஏறக்குறைய 177,948 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதன் சந்தை மதிப்பு என்பது 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை முன்பே பார்த்தோம். இந்நிறுவனம், 45.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாயை ஈட்டி வருகிறது. இன்றைய மின்னணு தொழில் உலகில் முக்கியமான மதிப்பைப் பெற்றுள்ள பெகாட்ரான் இந்தியச் சந்தையில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இளைஞர்களின் ஆண்ட்ராய்டு உலகில் இதன் வரவு, தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக உள்ளனர். மகளிர் அதிகளவில் பணியாற்றும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பெண்களை அதிகப்படியாக பணியில் அமர்த்தும் நிறுவனங்களை மாநில அரசு ஊக்குவிக்கிறது.

இந்தப் பின்புலத்துடன் பார்க்கும்போது ‘சீனாவின் ஆதிக்கத்தை மாற்றி தமிழ்நாட்டை செல்போன் தயாரிப்பின் மையமாக மாற்ற வேண்டும்’ என விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளதன் அர்த்தம் தெளிவாகப் பிடிபடும். விழாவில் முதலமைச்சர் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டார். அதாவது, ‘தைவானில் உள்ள மிகப்பெரிய மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக பெகாட்ரான் விளங்கி வருகிறது. உலக சந்தையில் வெற்றி பெற்ற பிராண்ட் ஒன்று தமிழ்நாட்டில் தயாராகிறது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய பெருமை. அகில இந்திய அளவில் எளிய முறையில் வணிகம் செய்வதற்கான தரவரிசை சாதனைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது. அதற்குச் சரியான சான்று இந்த பெகாட்ரான்’ என்றார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் ஹூண்டாய், ஃபோர்டு, மிட்சுபிஷி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்றின. அதேபோல் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் பெகாட்ரான் வந்திருக்கிறது.

மத்திய அரசிடம், மின்னணுத் துறையில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து அதனைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல, நிறுவனங்களைத் தொடங்க விரும்புகிறவர்களுக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்து வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குள் அதற்கான அனுமதியையும் அரசு மிக விரைவாக வழங்கி வருகிறது. மேலும் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை சலுகைகளையும் உடனடியாக வழங்குகிறது. இந்த வேகத்தைப் பார்த்துத்தான் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை நாடி வருகின்றன. மேலும் மின்னணுவியல் துறையை வளர்ந்து வரும் பட்டியலில் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது. விரைவில் மின்னணு வணிகப்பொருள் கொள்கையையும் வெளியிட உள்ளது. இதன்மூலம், மின்னணு துறைக்கு அரசு எந்தளவு கவனம் செலுத்தி வருகிறது என்பதை அறியலாம். ‘2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐந்து ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படலாம்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இந்திய செல்லுலார் அண்டு எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) ஆகியவை வெளியிட்டுள்ள கொள்கை சார்ந்த சிந்தனைக்குழுவின் அறிக்கை மேலும் ஒரு தகவலை முன்வைக்கிறது. அதாவது, இந்தியாவில் ஒட்டுமொத்த மின்னணுவியல் ஏற்றுமதி 2022 ஆம் ஆண்டில் 16 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்றும் மொபைல் போன்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியைத் தொட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது மொத்த மின்னணு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தைவான் நிறுவனம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நன்மை என்பது மட்டுமல்லாமல் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஏற்பட்ட ஒரு சறுக்கல் என்றும் கூறலாம்.