உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு ராமஜென்ம பூமி தொடர்பான ஊர்வலத்தின் பொழுது கலவரம் ஏற்பட்டு பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடக்கவில்லை என பாஜக விளக்கம் அளித்தது. எனினும் பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேர் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் 30ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மனுதாரர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக லக்னோ உயர்நீதிமன்றம் எதிர் மனுதாரர் ஆன சிபிஐ மற்றும் பாஜக நிர்வாகிகள் பதில் அளிக்க கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களும் கடந்த அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்புடைய நபர்கள் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உட்பட 21 பேர் மீது குற்றச்சாட்டை நிரூபிக்கப்படாததால் மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply