அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி..!

புதுடெல்லி: அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். தொடர்ந்து, 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நேற்று காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதியில் கூடி, அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது, “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவையில் பிரச்சினை எழுப்ப வேண்டாம்” என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். மேலும், “மிகவும் முக்கியமான கேள்வி நேரத்தின்போது இடையூறு செய்ய வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர், அவை மீண்டும் கூடியபோதும் இதேநிலை நீடித்தது. இதனால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள், அவை விதி எண் 267-ன் கீழ் நோட்டீஸ் கொடுத்தனர். அதில், அதானி குழும நிறுவனப் பங்குகள் சரிவால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து, கோஷம் எழுப்பினர். மேலும், அதானி குழும மோசடி குறித்து அவையில் விவாதம் நடத்துவதுடன், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை மீண்டும் கூடியபோதும் இதேநிலை நீடித்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இடதுசாரிகள், என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், ‘அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் அக்குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. மேலும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்களை தொடங்கி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது என்றும், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.