கடலில் கண்டெடுத்த முத்து தான் அண்ணாமலை… பிரதமர் மோடி புகழாரம்-கோவையில் பா.ஜ.க இளைஞரணி துணை தலைவர் பேச்சு.!!

கோவை : பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசியுள்ளார்.

பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், துணைத்தலைவர் சபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் கோவை மாநகர வார்டுகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏ.பி.முருகானந்தம் பேசியதாவது, அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி புகழராம் சூட்டினார். தமிழக தலைவர்கள் நிர்வாகிகள் மீது அவர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்.

பா.ஜ.க.,வின் அடுத்த இலக்கு தமிழகம் தான். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 25 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சியில் இருக்கப்போவது பா.ஜ.க தான்.

திமுக.,வை பற்றி நாம் பயப்பட தேவையில்லை. அண்ணாமலை எந்த ஒரு தொண்டனையும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் தூங்குவதே இரவு 2 மணிக்கு மேல் தான். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். நாம் அதற்கு பாடுபட வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களை அழைக்கலாம்.

மக்களை நாம் சென்றடைய வேண்டும். வார்டு வாரியாக இனி கூட்டங்கள் நடத்தப்படும்.திமுகவில் எத்தனை தலைவர்கள் வந்தாலும், பிரதமர் மோடி மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை போல் இருக்க முடியாது.

இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் நாம் தொடங்கினோம். இது தற்போது தேசிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2006 ல் இருந்து தற்போது வரையிலான தேர்தலில் மாற்றுக்கட்சி வேட்பாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து பேச வேண்டும்.

தேமுதிக, அமுமுக, நாம் தமிழர் மற்றும் மநீம ஆகிய நான்கு கட்சிகளையும் நாம் பின்தள்ளியுள்ளோம். மொடக்குறிச்சி தொகுதியில் கங்கனம் கட்டிக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தோம். சுலபமாக வெற்றி பெறலாம் என்ற மமதையில் இருந்ததால் களப்பணியாற்றினோம்.

கோவை பா.ஜ.க.,வின் கோட்டை. ரத்தத்தை சிந்தி இக்கட்சியை இங்கு வளர்த்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.