அதிமுக ஆதரவு… ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. ஒரே தோல்வியாமே.. தயாநிதி மாறன் பேச்சால் ஒரே சிரிப்பலை..!!

திருச்சி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை திமுக எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச் செயலா் மு மதிவாணன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா்கள் ஏ.ஜே. சாலமன், கே. லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2 ஆம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2 வது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சா்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், “ஒரே நாடு- ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த எம்பிக்களும் இடம் பெறவில்லை. அதேபோல, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் இல்லை.

முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதியை குழுவின் தலைவராக நியமித்துள்ளாா்கள். அது ஏன் எனத் தெரியவில்லை. நரேந்திர மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினா் தான் இருக்கிறாா்கள். ஆனால், இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணி. அதில் மக்களுக்கான தலைவா்கள் உள்ளனா்.

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்றிலும் அடுத்தடுத்து தோல்வி கிடைப்பதால் அத்தேர்தல்களில் ஒரே முறை தோல்வியடைந்து விடலாம் என்பதற்கே ஒரே நாடு- ஒரே தேர்தலை அதிமுக தற்போது ஆதரிக்கிறது. சிஏஜி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஊழலை மூடி மறைக்கப் பாா்க்கிறாா்கள்.

அதேபோல அதானி விவகாரம், பெரு நிறுவனங்களின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் திசைதிருப்ப தேவையற்ற சா்ச்சைகளை உருவாக்குவதுதான் பிரதமா் மோடியின் வேலை. 2024 இல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வருவோம்.” என்று அவர் கூறினார்.