அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று என்ன நடக்குமோ..? உச்ச கட்ட டென்ஷனில் இபிஎஸ், ஓபிஎஸ்..!

டெல்லி; அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பாக வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுமார் 20 நிமிடம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதங்கள் பின்வருமாறு,

1. பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது.

2. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும்.

3. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது.

4. அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும்.

5. பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

6. நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில்

1. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.

2. பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

3. பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.

4. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர்.

5. கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அதனால் பொதுக்குழு செல்லும் என்று வாதம் வைத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு விதமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் விதித்து உள்ளது. முதல் உத்தரவு, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது எடப்பாடி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போது நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. இரண்டாவது உத்தரவை கடந்த முறை கோர்டில் விசாரணை நடக்கும் போதே எடப்பாடி ஏற்றுக் கொண்டார். அதன்பின் கட்சியில் அவர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. யாரையும் நீக்கவும் இல்லை.

இதையடுத்து நாளை விசாரணை நடக்க உள்ள நிலையில் எடப்பாடி நேற்று முதல்நாள் உச்ச நீதிமன்றத்தில் தனது பதிலை மனுவாக தாக்கல் செய்தார். அதில், தொண்டர்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் பொதுக்குழு கூடியது. அவர்கள்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்றனர்.அதனால், அவர்கள் வைத்த கோரிக்கையால் தான் பொதுக்குழு கூடியது. இதற்காக நோட்டீஸ் கூட வழங்கினோம். ஆனால் அவர்கள் வரவில்லை. அதோடு பொதுக்குழு நடக்கும் நாளில் அதிமுக அலுவலகத்தை இவர்கள் சூறையாடி உள்ளனர். அவர் கட்சிக்கு தலைமை ஏற்கும் தகுதியே இல்லாதார் என்று எடப்பாடி கட்டமாக பதில் அளித்துள்ளார். இதில் தான் இன்று விசாரணை நடக்க உள்ளது.

இதில் வந்த இடைக்கால உத்தரவு ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக உள்ளது. அதோடு கட்சியில் மெஜாரிட்டி பற்றி நாங்கள் பார்க்க மாட்டோம், கட்சி விதிகள் பற்றி மட்டுமே பார்ப்போம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளதும் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாத்தியமாகவே பார்க்கப்படுகிறது