அதிமுக பொதுக்குழு வழக்கு : ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்-இபிஎஸ் கேவியட் மனு..!

டெல்லி: பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்; அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும் ஜெயலலிதாவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் இப்பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி பொதுக் குழுக் கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலைமையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது.

இதனால் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என்றானது. அத்துடன் ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானமும் செல்லும் என்ற நிலை ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடித் தீர்த்தது. ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி உள்ளது.