அதிமுக பொதுக்குழு வழக்கு : நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று முதல் விசாரணை தொடக்கம்- பெரும் பரபரப்பில் ஹைகோர்ட்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று முதல் விசாரணைக்கு வருகிறது.

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஹைகோர்ட்டில் இன்று முதல் நடக்க உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதிமுகவில் பொதுக்குழுவை நடத்த விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் கடுமையாக முயற்சித்தார்.. இதற்காக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து சார்பில் வழக்குகளும் தொடர்ந்தனர்,

ஆனால், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தும், பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவிட்டிருந்தார்.

பின்னர், அன்றைய தினமே திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்து முடிந்தது.. எனினும், கோர்ட் அனுமதி தந்து உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் சென்றார் ஓபிஎஸ்.. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், இதைமீண்டும் சென்னை ஹைகோர்ட்டே விசாரித்து, 2 வாரங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டு, தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது..

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2 நாட்களுக்கு முன்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. பின்னர். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தாங்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாகவே வாதங்களை முன்வைக்கிறோம் என்று விளக்கம் தந்தனர்.

இதையடுத்து நீதிபதி தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெற்று மனுவாகத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த கடிதத்தை திரும்ப பெற்ற ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்தனர்.. அப்போது நீதிபதி, இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, ஒருவேளை திருத்தம் இருந்தால், இதுதொடர்பாக கடிதம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் நீங்கள் ஆஜராகி தெரிவித்திருந்தால், நானே இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பேன் என்று கூறினார்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பிலோ, அந்த கடிதத்தில் உங்களுக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. இந்த வழக்கை நீங்கள் ஏற்கெனவே 2 முறை விசாரித்துள்ளதால் புதிதாக ஒரு நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரினோம்” என மீண்டும் விளக்கம் தந்தனர். பிறகு, ஓபிஎஸ் தரப்பு மனுவை பதிவுசெய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்யட்டும் என்று கூறி கூறி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இறுதியில், இந்தவழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்திருந்தார். அதன்படி இன்றுமுதல் ஜெயச்சந்திரன் பொதுக்குழு விசாரணையை துவங்க உள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உத்தரவுகள் வந்திருந்த நிலையில், தற்போது எந்த மாதிரியான உத்தரவுகள் வெளிவர போகிறதோ தெரியவில்லை.இப்போது வரை ஓபிஎஸ் சட்டரீதியான போராட்டங்களை கைவிடாத நிலையில், புதிய நீதிபதியை அடம்பிடித்து கேட்டு வாங்கி உள்ள நிலையில், விசாரணைகளும் எப்படி நடக்க போகிறது என்று தெரியவில்லை. எனினும் இந்த 2 வாரத்துக்கு, அதிமுகவுக்குள் டென்ஷன் எகிறியே காணப்படும் என்று தெரிகிறது.

புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வரும்நிலையில், இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்கவே  செய்யும்.அப்போது ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று தெரியவில்லை. அல்லது தீர்மானங்கள் ரத்தானால், எடப்பாடியின் அடுத்த நகர்வு என்ன என்று தெரியவில்லை.இதனால், இரு தரப்பிலுமே டென்ஷன் எகிறி உள்ளது.