கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்..!

கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது:
பிரதமரின் கிசான் சம்பான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 68 ஆயிரத்து 156 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 865 பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்ற பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் 12 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பி.எம். கிசான் பயனாளிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி இணைப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைத்துக்கொள்ளாத விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தினை அணுகி தங்களின் ஆதார் எண்ணை அவர்களுக்குரிய வங்கி கணக்குடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.