கரோனா ஊரடங்குக்கு பிறகு களைகட்டிய தீபாவளி… நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடியை கடந்தது பட்டாசு விற்பனை.!!

சிவகாசி: கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி களைகட்டியதால், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடந்துள்ளது.

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்துக்கு மேல் தயாராகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 2015-ல் உச்ச நீதிமன்ற வழக்கின் மூலம் பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை தொடங்கியது. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, சரவெடிகளுக்கு தடை, சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள், நீதிமன்றக் கட்டுப்பாடு, பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்கஅனுமதி, சீன பட்டாசுகள் வருகை உள்ளிட்ட காரணங்களால் சிவகாசி பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியது. இந்த ஆண்டு மூலப் பொருட்கள் தட்டுப்பாடு, உச்ச நீதிமன்ற விதிகளை மீறியதாக 60 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்தது, மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகளை இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தி குறைந்தது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் தீபாவளி சீசன் உற்பத்தி தொடர் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் வழக்கம்போல் இந்த ஆண்டு தீபாவளிக்கு 20-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட முடியாததால், இந்த முறை அதிக ஆர்வத்துடன் சிவகாசியில் பட்டாசு வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் உற்பத்தியான பட்டாசுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. நாடு முழுவதும் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்ட்ரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் பட்டாசு வர்த்தகம் ரூ.400 கோடியை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.150 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளது. மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் உற்பத்தி குறைவால் இந்த ஆண்டு பட்டாசு விலை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க (டான்பாமா) தலைவர் கணேசன் கூறுகையில், ‘இந்த ஆண்டு பட்டாசு வாங்க மக்களிடம் அதிக ஆர்வம் இருந்தது. நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம்’ என்றார்.