சிவசேனா பிளவு தொடர்ந்து .. என்சிபி கட்சியில் கிளம்பிய குழப்பம்.. பரபரப்பை ஏற்படுத்திய அஜித் பவார்..!

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் குழப்பமே இன்னும் முடியாத நிலையில், அங்கு என்சிபி கட்சியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு மகா விளாஸ் கூட்டணியில், தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனா கட்சி பிளவுபட்டது.

ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்எல்ஏக்கள் மகா விளாஸ் கூட்டணி அரசைக் கவிழ்த்தனர். பின்னர் பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தனர்.

இந்நிலையில், சிவசேனாவை தொடர்ந்து இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த என்சிபி தேசிய மாநாட்டுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளார். சரத் பவார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்ற போது, அஜித் பவார் பாதியில் வெளியேறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அக்கட்சியின் ஜெயந்த் பாட்டீல் மாநாட்டில் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அஜித் பவார் அங்கிருந்து கிளம்பி உள்ளார். இந்தச் சம்பவம் நடக்கக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான், சரத் பவாருக்கு முன்பு அஜித் பவார் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் தான் அஜித் பவார் மேடையில் இருந்து இறங்கிவிட்டார். அங்கு சுப்ரியா சுலே, அஜித் பவாரை சமாதானப்படுத்துவதையும் நிர்வாகிகள் பார்த்துள்ளனர்.

ஒரு வழியாக சுப்ரியா சுலே அஜித் பவாரை சமாதானப்படுத்தி மேடை ஏற்றினார். இருப்பினும், அதற்குள் சரத் பவார் தனது பேச்சைத் தொடங்கி இருந்தார். இதனால் அஜித் பவாரால் பேச முடியாமலேயே போனது. ஏற்கனவே அங்கு சிவசேனாவில் குழப்பம் ஏற்பட்டு, கட்சி பிளவுபட்ட நிலையில், இப்போது அஜித் பவார் கட்சி கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த 2019 மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் சரத் பவார் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாலையில் அஜித் பவார் பாஜக உடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்தார்.

இருப்பினும், அந்த அரசு வெறும் 80 மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தது. என்சிபி எம்எல்ஏக்கள் யாரும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று சரத் பவார் குறிப்பிட்டார். அதன் பின்னரே, மகா விளாஸ் கூட்டணி அமைந்தது. இந்தச் சூழலில் அஜித் பவார் மீண்டும் கட்சி கூட்டத்தில் பாதியில் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.