32 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை..!

கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பக்கம் உள்ள கொங்குருப்பாளையம் .குண்டேரி பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த வீரப்பனின் அண்ணன் மாதையன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு முதல் மாதையன்,ஆண்டியப்பன். பெருமாள் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கோவை சிறையில் பல ஆண்டுகளாக இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் .அவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது .இதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட மாதையன் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார் .ஆனால் கோவை சிறையில் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர் .30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர் .இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி கைதிகளை விடுதலை செய்யும் நடைமுறைப்படி ஆண்டியப்பன்,பெருமாள் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது .இதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனால் ஆண்டியப்பன் சேலம் மேட்டூருக்கும். பெருமாள் கர்நாடக எல்லையான கோபிநத்தத்தில் உள்ள சொந்த ஊருக்கும் சென்றனர். விடுதலை செய்யப்பட்ட பெருமாள் கூறியதாவது:- நீண்ட நாட்கள் சிறையில் இருந்த எங்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது .சிறைக்குள் குறிப்பிட்ட சிலருடன் தான் பேச முடியும் . தற்போது விடுதலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் உட்பட பலரையும் சந்தித்து பேசவும் , சுயமாகவாழவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலை செய்யப்பட்ட ஆண்டியப்பன் கூறியதாவது:- வீரப்பன் உறவினர் மற்றும் அவருடன் இருந்தேன் என்பதற்காக கொலை குற்றம் செய்யாத என்னை குற்றவாளி எனக்கூறி சிறையில் அடைத்தனர் .32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தேன். திருமணம் ஆகி 6 மாத கைக்கு குழந்தையாக எனது மகன் இருக்கும்போது நான் சிறைக்குச் சென்றேன், தற்போது அவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்து விட்டது .எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையிலே களித்து விட்டேன் .இனி என்ன செய்வது? என்று ஒன்றும் தெரியவில்லை. அரசு உதவி செய்தால் இனி இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து விடுவேன் .இவர் அவர் கூறினார்.