தொழிலில் நஷ்டம்… விஷம் குடித்து மனைவி – மகள் தற்கொலை-கணவர் கவலைக்கிடம்..!

கோவை அருகே உள்ள சூலூர் ,பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன்( வயது 50)இவரது மனைவி பழனியம்மாள் (வயது 48) இவருடைய மகள் தீஷ்னா தேவி ( வயது 25) காந்தரூபன் இதற்கு முன் கோவை ராமநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் சூலூருக்கு குடியேறினர். காந்தரூபன் கோவை ராமநாதபுரத்தில் வசித்து வந்த போது அந்த பகுதி மக்களிடம் பணத்தைப் பெற்று ஏலச் சீட்டு நடத்தி வந்தார். அந்த சீட்டு பணத்தை வட்டிக்கும் விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் வட்டிக்கு கொடுத்த பணம் திரும்பி வரவில்லை .இதனால் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது .மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. அதோடு பலரிடம் வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியாமல் காந்தரூபன் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி காந்தரூபன் அவரது மனைவி மகள் ஆகியோர் நேற்று அதிகாலையில் விஷம் குடித்தனர். காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது பழனியம்மாள், தீஷ்னா தேவி ஆகியோர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காந்தரூபனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.