ஆடிப் பெருக்கு… பூக்கள் விலை கிடு கிடு உயர்வு..!!

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நாட்களில் ஒன்று ஆடிப் பெருக்கு. இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும் அது பெருகி வரும் என்றும், எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும், தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று வழிபடுவதும் உண்டு. அந்த ஆடிப்பெருக்கு இன்று (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அதுபோன்று பூக்களின் தேவையும் அதிகமாக காணப்பட்டதால் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.600 – க்கு விற்பனை செய்த மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.800 – க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதுபோன்று செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து பூ மார்க்கெட்டில் உள்ள வியாபாரி ஒருவர் கூறும் போது:

கோவை பூ மார்க்கெட்டுக்கு ஒசூர், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, உசிலம்பட்டி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. அதுபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் இருந்து முல்லைப் பூ, ஓசூரில் இருந்து ரோஜா பூ வருகிறது. ஆடிப் பெருக்கையொட்டி நேற்று 3 டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் பலர் பூக்கள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:- விலை விவரம் மல்லிகை- ரூ.800, முல்லை- ரூ.480, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.320, ரோஜா- ரூ.240, கோழிக்கொண்டை ரூ.140, அரளி-ரூ.240, தாமரை ஒரு பூ – ரூ.10 என விற்பனையானது.