இதுக்கு கூடவா வரி… ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.120 – 300 வரை கட்டணுமாம்… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா..!!

கோவை: கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு வரி விதிப்புதாரருக்கும் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல், 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; ஆண்டுக்கு, 120 முதல், 300 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 5.22 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், குப்பை கையாளும் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, தனி அலுவலராக கமிஷனர்கள் இருந்தபோது, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டது.பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டதால், குப்பை வரி வசூல் நிறுத்தப்பட்டது. இதற்கு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததால், மீண்டும் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நடப்பு நிதியாண்டு முதல் வசூலிக்கப்படுகிறது.குடியிருப்புகளுக்கு சொத்து வரிக்கேற்ப, மாதம் ரூ.10 முதல், 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரூ.60, ரூ.120, ரூ.180, ரூ.240, ரூ.300 என, ஆண்டுக்கு இரு முறை செலுத்த வேண்டும். இத்தொகை, ஒவ்வொரு வரி விதிப்புதாரர்களின் கணக்கிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் விவரத்தை, மாநகராட்சி இணையதளத்தில், சொத்துவரி விதிப்பு எண்ணை குறிப்பிட்டு, அறிந்து கொள்ளலாம்.ரூ.10 கோடிக்கு கூடுதல் வருவாய்!மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறுகையில், ‘மாநகராட்சியில், குடியிருப்புகளுக்கு 600 சதுரடி வரை – 25 சதவீதம், 601 முதல், 1,200 சதுரடி வரை – 50 சதவீதம், 1,201 முதல், 1,800 சதுரடி வரை – 75 சதவீதம், 1,800 சதுரடிக்கு மேல், 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது, நேற்று அமலுக்கு வந்தது.

இதனுடன், குடியிருப்புகளுக்கான குப்பை வரியும் சேர்க்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு தனியாக வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை, மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். சொத்து வரி உயர்த்தியுள்ளதன் மூலம், ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்’ என்றனர்.