ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை உள்ளூர் மக்களே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ரசிக்கலாம். ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் பயணிகள் கடலின் அழகை ரசித்து செல்வார்கள். இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த மே மாதத்தில் பாம்பன் பாலத்தில் சென்ற பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாராயணன், முகேஷ் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மண்டபத்தில் இருந்து பாம்பன் நோக்கி சாலை பாலம் வழியாக சென்றனர். பாலத்தில் நடுவில் வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது.
கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முகேஷ் 200 அடி உயர பாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்டு தத்தளித்தார். நாராயணன் பாலத்தில் விழுந்து படுகாயமடைந்தார். கடலில் விழுந்த முகேஷ் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினார். இதனை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பார்த்ததும் உடனடியாக கடலில் குதித்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வாலிபர் முகேசை கயிறு கட்டி மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவரது காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் ஒரு பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 15 பேர் பலியானார்கள். அதன் பிறகு ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலையில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த தனியார் பேருந்தும் அரசு பேரும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் கவனம் சிதறுவதாகவும், பதற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Leave a Reply