அண்ணாநகர்: அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 15 வார்டுகளிலும் கொரோனாவை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது. அண்ணாநகர், 8வது மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த பகுதியில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை டாக்டர் பிரியதர்ஷினி தலைமையில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் மூலம் குழுவாக பிரிந்து வீடு, வீடாக பொதுமக்களிடம் உடல் நிலை பற்றியும் கொரோனா தடுப்பூசி போட்டது பற்றியும் கேட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
Leave a Reply