ஒடிசாவை சேர்ந்தவர் பஷந்த்நாயக் (வயது 19). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அங்கு அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
பின்னர் தனது அண்ணனுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சிறிய சிறிய வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று உணவகத்தில் கிரைண்டரில் அரிசி அரைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பசந்த்நாயக் மயங்கி கிரைண்டர் வயர் மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தார்கள் ஒடி வந்தனர். பின்னர் பசந்த்நாயக்கை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஷந்த்நாயக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து அண்ணனுடன் வந்து வேலைக்கு சேர்ந்த 2 நாளில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.