கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், துணக்கடவு, பெறுவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன.
இந்த தொகுப்பு அணைகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வழக்கமாக நிரம்பிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று தென்மேற்கு பருவமழை கை கொடுத்த நிலையில், பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகள் நிரம்பி விட்டன.
திருமூர்த்தி அணை மட்டும் நிரம்பாமல் உள்ளது. மற்ற அணைகள் நிரம்பி விட்டதால் பி.ஏ.பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பி.ஏ.பி தொகுப்பு அணைகள் நிறைந்தாலும் ஒப்பந்தப்படி தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி தண்ணீரை எடுத்துக் கொள்வது என்பது நிறைவேற்ற முடியாத செயலாக உள்ளது.
அதற்கு காரணம் பி.ஏ.பி திட்டத்தில் உள்ள சோலையார் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே சுரங்கப்பாதைகள் வழியாக கொண்டு வர முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் மழைப்பொழிவு அதிகமாக கிடைத்தாலும் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனைமலையாறு மற்றும் நல்லாறு போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் தான் பி.ஏ.பி திட்டத்தில் ஒப்பந்தப்படி தமிழகம் தண்ணீர் பெரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:-
சோலையார் அணை நீர்மட்டம் 161.33அடியாக உள்ளது. இதில் நீர்வரத்து 3865.88 கன அடியாகவும், வெளியேற்றம் 4596.20க.அடியாகவும் உள்ளது. பரம்பிக்குளம் நீர்மட்டம் 70.50/72 அடியாக உள்ளது.நீர்வரத்து:2779க.அடி.வெளியேற்றம்:1300 க.அடி.
ஆழியார் அணை நீர் மட்டம்:107.70/120அடி.நீர்வரத்து:1198 கன அடி. வெளியேற்றம்: 159 கன அடி. திருமூர்த்தி அணை நீர்மட்டம்: 28.74/60அடி நீர்வரத்து: 25 கன அடி வெளியேற்றம்: 27கன அடி. அமராவதி அணை நீர்மட்டம்: 88.42/90அடி. நீர்வரத்து: 1884 கனஅடி வெளியேற்றம்: 1926 கன அடி.