எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சிக்கு பின்னடைவு… பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு-டெல்லியில் தனித்து போட்டி..!

டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு முதல் பின்னடைவாக, மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்தும் வருகிறது.

பாஜகவை லோக்சபா தேர்தலில் வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள்வது என திட்டமிட்டுள்ளன. இதன் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் சிம்லாவில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. டெல்லி சேவைகள் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க கோருகிறது ஆம் ஆத்மி. ஆனால் காங்கிரஸோ, ஆம் ஆத்மி பாஜகவின் பி டீம் என்கிறது.

இதனிடையே டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறதாம். அத்துடன் மத்திய பாஜக அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கும் தொடக்க நிலையில் ஆம் ஆத்மி ஆதரவு தெரிவிக்கிறதாம். மேலும் அனைத்து தரப்பினருடம் ஆழ்ந்து ஆலோசனை நடத்தி பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறது அக்கட்சி. ஆம் ஆத்மி கட்சியின் இத்தகைய நிலைப்பாடுகளால் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சிக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.