நண்பர்களுடன் மது குடித்த தனியார் நிறுவன ஊழியரிடம் நகை செல்போன் பறிப்பு- மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு .!

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றார். பின்னர் மது வாங்கிவிட்டு நண்பருடன் ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அரவிந்தின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகை மற்றும் நண்பர்களிடம் இருந்த 3 செல்போன்களை பறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரம் என்பதால், அந்த கும்பல் நகை மற்றும் செல்போன்களுடன் அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து அரவிந்த் போத்தனூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்து சென்ற 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.