கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் இவர் தனது காரில் நெகமம் நால் ரோட்டில் உள்ள கிளப்புக்கு சென்றார். அங்கு வைத்து மது குடித்தார். பின்னர் கிளப் வளாகத்தில் நிறுத்தி இருந்த அவருடைய காருக்கு சென்றார். குடிபோதையில் இருந்த ரவிக்குமார் காரில் ஏ.சியை போட்டு விட்டு காருக்குள்ளேயே தூங்கினார். அப்போது சில மணி நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு காருக்குள் மயங்கி கிடந்தார்.
மாலை 6.30 மணியளவில் நீண்ட நேரமாக கார் நிற்பதை பார்த்த பார் ஊழியர்கள் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ரவிக்குமார் அசைவு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து ரவிக்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரவிக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நெமகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் ஏ.சியில் இருந்து வெளியான நச்சு புகை காரணமாக ரவிக்குமார் மூச்சு திணறி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply