வானில் ஒரு அதிசயம்… 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் அரிய பச்சை நிற வால் நட்சத்திரம்..!

திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது.

எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது.

வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. மிக நீண்ட நீள்வட்டப் பாதையில் வரும் இந்த வால் நட்சத்திரம் ஜூன் 12 இல் சூரியனை சுற்றும். இன்றைய தினம் பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது.

இதை தொலைநோக்கி இல்லாமலேயே காண முடியும். இந்த பச்சை வால் நட்சத்திரத்தை இந்திய வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் நிற நிரல் மானி (spectroscope) கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிகாலை 4 மணி முதல் விடியும் வரை நட்சத்திரத்தை படம் பிடிக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் நடந்த இந்த முயற்சியின் போது மேக மூட்டத்தால் அவற்றை படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்த தகவல்களை விஞ்ஞானிகள் சேகரித்து முடிக்க 3 மாதங்கள் ஆகும்.

கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இன்று தொடங்கி 4 மாதங்கள் வரை பார்க்கலாம். இன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நட்சத்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பனி மூட்டத்தால் தெரியவில்லை. சில இடங்களில் மக்கள் வீட்டிலிருந்தபடியே லேசாக தெரிந்த வால் நட்சத்திரத்தை கண்டு களித்தனர்.

இந்த நட்சத்திரம் அடுத்த 4 மாதங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களுக்கு தெரியும். இதுவரை 6500 க்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் உள்ள இந்த பச்சை வால் நட்சத்திரம் c/2022 E3 ZTF என அழைக்கப்படுகிறது. இந்த வால் நட்சத்திரம் 4 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பூமியை இந்த பச்சை வால் நட்சத்திரம் கடந்து செல்லும்.

பூமியை இந்த வால் நட்சத்திரம் நெருங்கும் போது சுமார் 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இது மாலை நேரத்தில் வடக்கு திசையில் இருக்கும். சூரியன் மறைவுக்கு பிறகு பார்க்கலாம். இந்த நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் சில இடங்களில் நன்றாக வானில் தெரிந்தது என்கிறார்கள் மக்கள். கற்காலத்திற்கு பிறகு முதல்முறையாக இந்த வால் நட்சத்திரம் தோன்றியுள்ளது. இந்த நட்சத்திரத்தை பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் இருந்தால் எளிதாக பார்க்கலாம் என்கிறார்கள்.

பொதுவாக வால் நட்சத்திரங்கள் அதன் சுற்றுபாதையின் தற்போதைய நிலை மற்றும் ரசாயன கலவை உள்ளிட்டவையால் அது வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கும். அதனால் இந்த வால் நட்சத்திரம் பச்சையாக தெரிகிறது. தென் அரை கோளத்தில் உள்ளவர்கள் இந்த வால் நட்சத்திரத்தை பார்ப்பது அரிதாகும். பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வந்தாலும் அது பூமியிலிருந்து நிலவின் தூரத்தை காட்டிலும் 100 மடங்கு தூரத்திலேயே அமைந்திருக்கும். இந்த பச்சை வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நட்சத்திரம் மேற்கு வங்கம், ஒடிஸா, லடாக் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் நன்றாக தெரியும்.