கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(70). இவர் இருட்டிபாளையம் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது விவசாய  தோட்டத்தில் தனது மனைவி சின்னத்தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார். காலை தோட்டத்திலிருந்து இருட்டிபாளையத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாலை ஊற்றிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக  பள்ளத்தின் வழியாக ராமன் நடந்து சென்றபோது பள்ளத்தில் புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென ராமனை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். அக்கம் பக்கம் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை விரட்டி அடித்து விட்டு உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் யானை தாக்கி உயிரிழந்த ராமனின் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. யானை தாக்கி இறப்பவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் நிலையில் மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டு யானை தாக்கி கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.