அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். 6 குழந்தைகளுக்கு தாயான இவர், ஜூன் 2009-ல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென அவரை மின்னல் தாக்கியுள்ளது.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர சம்பவத்தில் இருந்து க்ரோன் அதிசயமாக உயிர் பிழைத்தார். இருப்பினும், இவரின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. இந்த மின்னல் ஏற்பட்ட உடனே அதி பயங்கரமான சத்தமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, க்ரோன் சற்று சுதாரித்துள்ளார். இந்த மின்னலானது 1,200 மின்னல் ஸ்ட்ரைக்ஸ் கொண்டதாக கருதப்படுகிறது.
சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக ஊடுருவி, க்ரோன் சமைக்க வைத்திருந்த ஒரு வாணலியின் மீது தாக்கி அதை தூக்கி எரிந்தது. அதன் பிறகு, அதிலிருந்து வெளிப்பட்ட மின்னல் க்ரோனின் மார்பில் நேரடியாகத் தாக்கியது. இதன் காரணமாக அவருக்கு கடுமையான வலி நெஞ்சில் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த மோசமான சம்பவத்தில் க்ரோனின் ஒன்பது வயது மகன், டிரிஸ்டனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், இவர் தான் அவசர சேவைக்கு போன் செய்து, இந்த அபாயகரமான சம்பவத்தை குறித்து கூறியுள்ளார். இதற்கிடையில், மற்றொரு மின்னல் அவரின் வீட்டின் மீது தாக்கியது. இதன் காரணமாக க்ரோனின் வீட்டில் உள்ள கணினி சேதமடைந்தது. போன் செய்த பிறகு அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, க்ரோன் மற்றும் அவரது குடும்பத்தினரை காப்பாற்றி உள்ளனர்.
பிறகு க்ரோன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மூன்று நாட்களுக்கு வழங்கப்பட்டது. மின்னல் தாக்கியதால் க்ரோனுக்கு பயங்கரமான வலிப்பு ஏற்பட்டது. மேலும், அவரது நரம்பு மண்டலத்திலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாக்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 ஆண்டில் இவர் ஏபிசி செய்தி பிரிவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவருக்கு ஒரு அசாதாரண திறன் வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த திறன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணரும் திறன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புயல் மேகங்கள் சூழும் போது, க்ரோன் தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வை பெறுவதாக குறிப்பிடுகிறார். மேலும், அவ்வப்போது தலைசுற்றல், பய உணர்வு போன்ற பாதிப்புகளும் இவருக்கு ஏற்பட்டுள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.