கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வரும் 23, 24-ந் தேதி கரும்பு விவசாயிகளுக்கான திருவிழா.!

கோவை:
கரும்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு சங்கத்துடன் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் இணைந்து நடத்தும் கன்னல் என்ற பெயரில் கரும்பு விவசாயிகளுக்கான விழாவில் தென்மாநில கரும்பு விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 24-ந் தேதி (சனிக்கிழமை) கரும்பு இயந்திரமயமாக்கல் குறித்த பயிலரங்கு நடைபெறுகிறது. இதில், சா்க்கரை ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள், இயந்திர உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர்.
கன்னல் விழாவையொட்டி 30க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்ட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், பொதுத் துறை ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்முனைவோர், தனியாா் நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்கியிருப்பவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய கரும்பு ரகங்கள், கரும்பு விவசாயத்தில் சமீபத்திய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்த உள்ளனா்.
மேலும், கரும்பு சாகுபடி குறித்த முக்கியமான தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயி – விஞ்ஞானி கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.