10-ம் வகுப்பு படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கோவையில் கைது.!!

கோவை மாவட்டம் காரமடை அடுத்த கண்ணார் பாளையம் ரோட்டில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்குள்ள டாக்டர் 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் முதன்மை மருத்துவர் சேரலாதன், காரமடை மருத்துவர் மனோஜ் பிரபு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீப் பிஸ்வாஷ் (வயது 41) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதில் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அவர் 10 -ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஊசி போட்டவுடன் மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அலோபதி மருந்துகள் ஊசி மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த கிளீனிக் சீல் வைக்கபட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் காரமடை காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் போலீசார் போலி டாக்டர் தீப்பிஸ்வாஸை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.