கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி தொழிலாளி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமி எதிர்பார்க்காத போது அவரது கழுத்தில் தாலி கட்டினார். இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்து அழுதார். அதற்கு தொழிலாளி திருமணம் நடந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறி சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் வேறு வழியில்லாமல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். தொழிலாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானார். கடந்த 8-ந்தேதி திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி அளித்த புகாரின் பேரில் அவரை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Leave a Reply