17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்: உடந்தையாக இருந்த நண்பர் போக்ஸோவில் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேட்டை சேர்ந்தவர் ராம்கி
(வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ஆனால்
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1
வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன்
பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி
நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து
வந்தனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள்
தங்களது மகளை கண்டித்தனர். மேலும் கட்டிட தொழிலாளியுடன் பேசுவதையும்,
பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை அவரது
பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது
குறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி
வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுமியை ராம்கி தனது நண்பரான அதே
பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசீயன் விஜய் (20) என்பவருடன் சேர்ந்து திருமண
செய்வதாக ஆசை வார்த்தை கூறி தஞ்சாவூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கட்டிட தொழிலாளியுடன் தங்கி
இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அவரை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற
ராம்கி மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3
பேரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்
ராம்கி திருமணம் செய்வதாக ஆசை வார்த்து கூறி அழைத்து சென்று அவரை பாலியல்
பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி
சென்று பாலியல் பலாத்காரம் செய்த ராம்கி, அவருக்கு உடந்தையாக இருந்த
விஜய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.