தீபதூண் விவகாரம் – திருப்பரங்குன்றத்தில் தடை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், தீபத்திருநாளான இன்று ஒருநாள் மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.இந்தத்தீர்ப்புக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தமனுவில் திருப்பரங்குன்றத்தில் உள்ளது நில அளவைக் கல்தூண் என்றும் இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நில அளவைத் தூண்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விசாரிக்கப்படுமா, திருப்பறங்கன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் ஆதரவாகவும், எதிராகவும் திரள வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரு தரப்பினரும் அதிக அளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மதுரை மாவட்ட எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்லது பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் பொதுமக்கள் ஏறிச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான உத்தரவுகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள வழக்கமான மத வழிபாடுகள் மற்றும் தர்கா உள்ளிட்ட நிறுவனங்களின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளுக்கும், காவல்துறையின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்து, நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை நடைமுறையில் இருக்கும். முன்னதாகத் திரும்பப் பெறப்படாவிட்டால், குறிப்பிட்ட காலம் வரை இந்த உத்தரவு தொடரும் என மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.