அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்து சிக்கும் முக்கிய புள்ளி

தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை தொடர்பாக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உள்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 28 மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 4 குவாரிகளில் மட்டும் கணக்கெடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலி அனுமதிச் சீட்டுகள் தயாரிப்பு, அரசு ஆவணங்களில் தவறான பதிவுகள் மற்றும் விதிகளை மீறி அதிக ஆழத்திற்கு மணல் அள்ளியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நீர்வளத்துறை அதிகாரிகள் 18 பேர் மற்றும் 9 தனிநபர்கள் என மொத்தம் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 24 குவாரிகளிலும் முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால், இந்த மோசடியின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது மூத்த தலைவரான துரைமுருகன் மீதும் மெகா ஊழல் வழக்குப் பாய்ந்திருப்பது திமுக தலைமைக்குக் கடும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி வருவது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.