‘துரந்தர்’ பட ஸ்டைலில் மர்ம கொலைகள் – அச்சத்தில் பயங்கரவாதிகள்!

 இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்தில் ரகசியமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடக்கும் மர்ம கொலைகள் அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் இத்தனை காலமாக ஒரு வேலையாகவே செய்து வருகிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த எல்லை தாண்டிய தாக்குதல்களை முழுமையாக நிறுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கிடையே பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே மர்மமான ஒரு விஷயம் நடந்து வருகிறது. அதாவது பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து தொடர்ந்து மர்மக் கொலைகள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்தில் ரகசியமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்கள் இருவரும் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் ஆகும். இருவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், லாகூரின் ஜோஹர் டவுன் பகுதியில் இருந்து ராவல்பிண்டியில் உள்ள கேரிசன் கிரவுண்ட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்கு அருகில் இந்த பகுதி அமைந்துள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய ரகசிய இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது லஷ்கர் அமைப்பின் உறுப்பினர்களை நேரடியாக சந்திப்பதை சயீத் தவிர்த்து வருகிறாராம். அவர்களுடன் ஆடியோ மூலமாக மட்டுமே தொடர்பு கொள்கிறார். அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வெளியில் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்குகளில் ஹபீஸ் சயீத் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இது வெறும் கண்துடைப்பு என்றும் உண்மையில் அவர் சிறையில் இல்லாமல் பாதுகாப்பான இல்லத்தில் சொகுசாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது..

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள நவாப்ஷா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் ஐஎஸ்ஐ அமைப்பின் பலத்த பாதுகாப்பில் உள்ள ரகசிய இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பஹாவல்பூரில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கியத் தலைமையகமான மார்கஸ் கடுமையாக சேதமடைந்தது. இதிலிருந்து அந்த அமைப்பு இன்னும் முழுமையாக மீண்டு வர முடியாமல் தடுமாறி வருகிறது.

மசூத் அசாரும் தனது அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களை நேரடியாகச் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். குறிப்பிட்ட சில முக்கியத் தளபதிகளுடன் மட்டுமே அவர் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பல பயங்கரவாதிகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ யார்.. இவர்கள் எதற்காக பயங்கரவாதிகளை குறிவைத்து கொல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் பயங்கரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அச்சம் காரணமாகவே இருவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஐநா சபையால் சர்வதேசப் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத், 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமாக இருப்பவர். மசூத் அசார், புல்வாமா, பதான்கோட் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர் ஆகும்.