இனி தேர்வுக் கட்டணம் இல்லை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் தேர்வு கட்டணமோ அல்லது வினாத்தாள் கட்டணமோ வசூலிக்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வழக்கமாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் வினாத்தாள்கள் அச்சிடுவதற்காகத் தலைமை ஆசிரியர்கள் சார்பில் மாணவர் ஒருவருக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி உயர் நீதிமன்றமதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மாணவர்களிடம் வினாத்தாள்கள் அச்சடிப்பதற்காக கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கட்டண வசூலை உடனடியாகத் தடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது

விதியை மீறி எந்த பள்ளியாவது தேர்வுக்கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் 108 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தவறு இழைக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.