சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள் என தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, ‘இன்றைக்கு இருக்கும் பிள்ளைகள் முடி வெட்டுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பள்ளிக்கு செல்கிற மாதிரியா முடி வெட்டுகிறார்கள்?, சில பிள்ளைகளை பார்க்கும் போது ரவுடி மாதிரி இருக்கிறது. முதலில் பள்ளி மாணவர்கள் முடி வெட்டுவதை திருத்தம் செய்ய வேண்டும். ஒழுங்காக முடி வெட்டும் குழந்தைகளை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள்ள். சரியாக வெட்டவில்லை என்றால் மொத்தமாக மொட்டை அடித்துவிடுங்கள், அதில் தவறே இல்லை. என் பிள்ளையாக நினைத்து இதை நான் சொல்கிறேன். அப்போது தான் அவன் சரியாக வெட்டுவான். அங்கிருந்து தான் தவறே ஆரம்பிக்கிறது.
இரண்டாவது பேண்ட்டை காலுக்கு மேல் தூக்கி போடுகிறார்கள். பெற்றோர்கள் ஏன் இதை அனுமதிக்கிறீர்கள். நம் வீட்டு பிள்ளை தவறே செய்திருக்க மாட்டான் என எல்லாப் பெற்றோர்களும் நினைக்கிறார்கள். ஆனால் தவறான சேர்க்கை மூலம் ஏதேனும் ஒரு சூழலில் நம் வீட்டுப் பிள்ளையும் போலீஸ் ஸ்டேனலில் போய் நிற்பான். அங்கே மாணவரின் ஹேர் ஸ்டைல், தோற்றத்தை பார்த்தவுடன் இவன் தவறு செய்திருப்பான் என போலீஸ்காரர்கள் உறுதி செய்துவிடுவார்கள். ஏனென்றால் அவனுடைய தோற்றம் தான் அவனுடைய குணத்தை நிர்ணயிக்கிறது. அவன் தவறு செய்திருப்பானா? இல்லையா? என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகு தான் தெரியும். ஆனால், பார்த்தவுடன் அவனுடைய குணத்தை ஜட்ஜ்மெண்ட் செய்கிறார்கள் என்றால் அது அவனுடைய உடையும் ஹேர் ஸ்டைலும் தான்.
அதை தயவு செய்து மாற்ற வேண்டும். கண்டிப்பாக நம்முடைய பிள்ளைகள் சரியாக முடி வெட்ட வேண்டும், இதை நாம் ஒரு ரூல்ஸாக கொண்டு வர வேண்டும். இதை நான் ஒரு தாயாக பேசுகிறேன், அமைச்சராக பேசவில்லை. ஏனென்றால் சில விஷயத்தில் தவறு செய்யாமலேயே மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் தான் இதை சரி செய்ய வேண்டும்’ என்று பேசினார். பள்ளி மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள் என அமைச்சர் பேசியது விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.









