சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்

சென்னை உட்பட நாடு முழுவதும் 4,000 கிலோமீட்டர் தொலைவுக்குப் புல்லட் ரயில் சேவை திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகிய நகரங்கள் இந்தப் புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக குறையும். இதனால் இரு நகரங்களும் ஒரே நகரத்தைப் போல மாறிவிடும் என்றும், பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான பயணம் 2 மணி நேரம் 10 நிமிடங்களாகக் குறையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், அடுத்தகட்டமாகப் புல்லட் ரயில் சேவையை கூடுதலாக 3,000 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பது குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அகமதாபாத்-மும்பை இடையிலான முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தென்னிந்தியாவிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.