இஸ்ரேல் பொது தேர்தலில் வௌிநாட்டு தலையீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்ற பொது தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை(27ம் தேதி) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 54 இடங்களும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டுக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன.
அரபு கட்சிகளுக்கு 19 இடங்கள் கிடைத்துள்ளன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் பெற வேண்டும். எனவே, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் நலன்களுக்கு எதிராக செயல்படும் வௌிநாட்டு அமைப்புகள் அளித்த நிதியுதவி மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து முறையற்ற செல்வாக்கு செலுத்தப்பட்டது பற்றி விசாரணை நடத்த உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டுக்கு இஸ்ரேலிய மத்திய தேர்தல் குழு தலைவர் நீதிபதி நோம் சோல்பர்க் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ராம்கேட்(இஸ்ரேல் தேர்தலில் அரபு கட்சிகளின் முறைகேடு) விவகாரம் ஒரு பூகம்பம். பொது தேர்தலில் வௌிநாட்டு நிதியுதவி தொடர்பாக காவல் துறை மற்றும் உள்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.








