நீலகிரி மாவட்டத்தில் அதிகன மழையின் போது 125 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மீட்பு வல்லுநர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி வரை கனமழை கொட்டியது. இதன் காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் பகுதிகளில் 88 இடங்களில் மண்சரிவு, 61 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, 19 இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. 23 வீடுகள் சேதம், 11 மின் கம்பங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பருவமழை சமயங்களில் நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு வல்லுநர் குணால் வருவாய்த்துறையினருடன் இணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதியில் ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று ஊட்டி அருகே லவ்டேல், தலையாட்டி மந்து, கோடப்பமந்து, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர், மாவட்டம் முழுவதும் 125 இடங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த பிறகு அந்த இடங்களில் கன மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே தகவல் அளிக்க கூடிய சென்சார் கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் மற்றும் மண் சரிந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால், மலை ரயில் சேவை இன்று (அக்.30) முதல் வரும் நவ.1ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.








