சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் தினக்கூலியை ரூ.325ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தும் முன்மொழிவுக்கு மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 382 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2,848 பெண்கள் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் உணவு தயாரித்தல், விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தவும், இதற்கான கூடுதல் செலவை மாநகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பணியாளரின் மாத வருமானம் ரூ.9,750ல் இருந்து ரூ.12 ஆயிரமாக அதிகரிக்கும். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் உணவுக்கு பதிலாக, ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.50 உணவுப்படியாக வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலைக்கு எம்.சி.டி.எம். சிதம்பரம் சாலை எனப் பெயர் சூட்டவும், மாநகராட்சி பராமரித்து வந்த டென்னிஸ், பூப்பந்து, டேபிள் டென்னிஸ், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டு திடல்களை நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.








