உத்தர பிரதேசத்தின் நொய்டா அருகே ஜேவாரில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.இதற்காக விவசாயிகளிடம் இருந்து 7,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையை பெற்ற ஏராளமான விவசாயிகள், கிரேட்டர் நொய்டாவின் ஜக்சார் கிராமத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) கணக்குகளை தொடங்கி லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். இந்த சூழலில் பிஎன்பி வங்கியின் 30 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.35 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பிரிஜேஷ் கூறும்போது, “நொய்டா விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியதற்காக எங்கள் குடும்பத்துக்கு ரூ.1.29 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இதை பிஎன்பி வங்கியில் எனது தாயின் வங்கிக் கணக்கில் செலுத்தினோம். இதில் ரூ.15 லட்சத்தை மட்டுமே எடுத்தோம். மீதி தொகை வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தது. இதில் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எஸ்எம்எஸ் அல்லது இமெயிலில் எந்த தகவலும் வரவில்லை” என்றார். நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் பணமும் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.35 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் மேலாளர் உட்பட 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.









