கே.என்.நேருக்கு சோதனைக்கு மேல் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று மீண்டும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த முறைகேடு புகார்களின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதலே சோதனையைத் தொடங்கி தீவிரமாக ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். திருச்சியோடு சேர்த்து சென்னையிலும் நேருவுக்குத் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 அரசுப் பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்ச முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதற்கட்ட சோதனையை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு (FIR) செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அடுத்தகட்ட அதிரடிச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில் முறைகேடு செய்து சுமார் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது 2-வது முறையாக இந்தச் சோதனை நடைபெறுகிறது.

சோதனை செய்தி பரவியதை அடுத்து, திருச்சியில் உள்ள கே.என்.நேருவின் வீட்டின் முன்பாக ஏராளமானதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

இந்தச் சோதனையை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது தற்போதைய ஆட்சியின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என்றும், மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.