இஸ்ரேலில் நடந்த பொது தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சம அளவிலான இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நெசட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
கடந்த 2023ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதன் பின்னர் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியது. இந்த போர்களுக்கு பின் நடந்த தேர்தலில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் 77 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் நெதன்யாகுவுக்கும் அவரது போட்டியாளரான யாஷர் கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவ தளபதியுமான கோடி எய்சன்கோட்டுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நெதன்யாகுவுக்கு 54 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சி 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. சிறிய அரபு கட்சிகள் 19 இடங்களை வென்றுள்ளன.
மொத்தம் 120 இடங்களில் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை. நெதன்யாகுவுக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகிறது. அரபு கட்சிகள் நெதன்யாகுவை ஆதரிக்க போவது இல்லை என தெரிவித்துள்ளன. எய்சன் கோட் அரபு கட்சிகளுடன் கை கோர்ப்பாரா என்பது தெரியவில்லை. இன்னும் 4.8 லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.









