மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: முய்சு கட்சி அமோக வெற்றி.!!

மாலே: மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் முய்சு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாக வென்றது.

இதன் பிறகு முய்சுவால் எளிதாக விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு.. அங்கு அதிபராக முய்சு உள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அங்கு மொத்தம் 93 எம்பிக்கள் இருக்கும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2.8 லட்சம் மாலத்தீவு மக்கள் இந்த முறை தங்கள் எம்பிக்களை தேர்வு செய்தனர்.

மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே நமது நாட்டை போலப் பிரதமர் ஆட்சி இல்லை. அங்கே அதிபர் தான் எல்லாமே.. மாலத்தீவில் அனைத்து அதிகாரங்களும் அதிபருக்கே இருக்கும். இந்த அதிபர் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியாக நடக்கும். கடந்தாண்டு நடந்த இந்த அதிபர் தேர்தலில் தான் முய்சு வெற்றி பெற்று இருந்தார். இதேபோல தேர்தல் நடந்து சில மாதங்கள் கழித்து மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குத் தனியாகத் தேர்தல் நடக்கும். அதில் தான் எம்பிக்கள் தேர்வாவார்கள்.

அதிபராக யார் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை முக்கியம். அப்போது தான் அதிபர் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும். இதன் காரணமாகவே முய்சுவால் கடந்த சில மாதங்களாக விரும்பிய சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாகவே நேற்றைய நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதற்கிடையே மாலத்தீவு அதிபராக இருக்கும் முய்சு இப்போது நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டார்.

மாலத்தீவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முய்சு கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது. அங்கு மொத்தம் 93 இடங்கள் இருக்கும் நிலையில், இதுவரை குறைந்தது 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. அவர் எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் அது தோற்கடிக்கும் நிகழ்வுகளே தொடர்ந்தது. இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முய்சு கட்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் முய்சு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அங்கு முன்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருந்த முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியால் சுமார் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இந்த பெரிய வெற்றி முய்சுவுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அவர் ஏற்கனவே அதிபராகப் பொறுப்பேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்திய ராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தி வருகிறார். அதேநேரம் மாலத்தீவில் நடக்கும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை எல்லாம் அவர் சீன நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறார். இப்போது முய்சு நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.